ரஜினி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்; ராமதாஸ் மீதான வழக்கில் தடை

மதுரை : மதுரையில் நடிகர் ரஜினி அணி வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பதிவான வழக்கில் பா.ம.க.,நிறுவனர் ராமதாசுக்கு எதிரான கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

நடிகர் ரஜினியை பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து வந்தநிலையில் 2004 ல் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை வந்தார். வழக்கறிஞர் மணவாளன் உள்ளிட்ட சிலர் நெல்பேட்டை அண்ணாதுரை சிலை அருகே ராமதாசுக்கு எதிராக கறுப்புக் கொடியுடன் கோஷமிட்டனர். மணவாளன் உள்ளிட்ட சில வழக்கறிஞர்களை தாக்கி, காயம் ஏற்படுத்தியதாக ராமதாஸ் உள்ளிட்ட சிலர் மீது விளக்குத்துாண் போலீசார் வழக்கு பதிந்தனர்.

மதுரை (ஜெ.எம்.,1) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ராமதாஸ்,'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. அரசியல் உள்நோக்கில் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அந்நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி எம்.நிர்மல்குமார்: கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அந்நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விளக்குத்துாண் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை பிப்.20 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement