சீனா vs இந்தியா: சீனாவின் திட்டத்திற்கு எதிராக அருணாச்சலப் பிரதேசத்தில் மெகா திட்டம்!
இட்டாநகர்: பிரம்மபுத்திரா ஆற்றில் அணை கட்டும் சீனாவின் திட்டத்திற்கு போட்டியாக, அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் அணை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலகின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றான பிரம்மபுத்திரா, திபெத்தில் உற்பத்தியாகி, இந்தியா வழியாக வங்கதேசம் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தற்போது திபெத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்திராவில் பல்வேறு அணைகளை கட்டி, வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. அந்த வகையில், இந்திய எல்லையில் மிகப்பெரிய அணை ஒன்றைக் கட்ட சீனா ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பிரம்மபுத்திரா ஆற்றில் வரும் தண்ணீர் குறையும் என்று கருதப்படுகிறது.
சீனாவின் திட்டத்தை கருத்தில் கொண்டு, புதிய அணை கட்டும் திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், இந்த பிரம்மாண்ட அணை கட்ட திட்டங்கள் தயாராகி வருகின்றன. இந்த அணை, அருணாச்சல பிரதேசத்தில் நீர் மின்சார உற்பத்திக்கு பேருதவியாக இருக்கும். சீனா திடீரென்று அதிகப்படியான தண்ணீரை பிரம்மபுத்ராவில் திறந்து விட்டால், அதை தடுப்பதற்கான ஒரு உத்தியாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.
புதிய அணை எங்கு அமைய உள்ளது, அதனால் பாதிக்கப்படும் கிராமங்கள், எவ்வளவு நீர் தேக்க முடியும் என்று ஆரம்பகட்ட கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்காக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்போரை மொத்தமாக இடம்பெயர்வு செய்ய வேண்டி இருக்கும். அந்த கிராம மக்கள், அணை கட்டும் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.