திருமணத்தை ஏற்க மறுப்பது தற்கொலைக்கு தூண்டுவதாக ஆகாது: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: 'மகன் திருமணத்தை தாய் ஏற்க மறுப்பது, இன்னொரு பெண்ணை தற்கொலைக்கு தூண்டுவதாக ஆகாது' என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
காதலனின் தாயார் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், காதலி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு துாண்டியதாக, காதலனின் தாயார் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மகன் திருமணத்தை ஏற்க தாய் மறுப்பு தெரிவிப்பது, இன்னொரு பெண்ணை தற்கொலைக்கு துாண்டுவது ஆகாது. அதை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306ன் கீழ் குற்றமாக கருத முடியாது.
உண்மையில், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தினர் தான், காதலன் காதலி இடையிலான உறவில் அதிருப்தியில் இருந்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வதை தவிர, வேறு வழியில்லாத நிலையை அந்த பெண்ணுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்படுத்தினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.