அசாமின் 2வது தலைநகரம் திப்ருகர்; முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு

2


கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் 2வது தலைநகராக திப்ருகர் உருவாக்கப்படும் என்று குடியரசு தினவிழாவில் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.


அசாம் மாநிலத்தில் நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் திப்ருகரில் முதல்முறையாக நடைபெற்றது. இதில், பங்கேற்று தேசிய கொடியேற்றி அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


அவர் கூறியதாவது: திப்ருகர் நகரமானது மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் தொழில் மையத்தின் முக்கிய பகுதியாக திகழ்கிறது. தேயிலை நகரமாக அறியப்படும் திப்ருகரை, மாநிலத்தின் 2வது தலைநகராக மாற்ற முடிவு செய்துள்ளோம். இன்று இங்கு தேசிய கொடியை ஏற்றியது, இந்த நகரை 2வது தலைநகராக மாற்றுவதற்கான முதல் அடியாகும்.

2026 ஜனவரி 25ம் தேதி திப்ருகரில் புதிய சட்டசபை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும். 3 ஆண்டுகளுக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும். 2027ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு, சட்டசபை கூட்டத்தின் ஒரு அமர்வு இங்கு நடக்கும். திஸ்பூர் மற்றும் சில்சார் ஆகிய பகுதிகளை விரைவாக நகரமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திஸ்பூரில் புதிய ராஜ்பவன் கட்டப்பட்டுள்ளது. கலாசார தலைநகராக திஸ்பூரை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பிரம்மபுத்ரா மற்றும் பராக் பள்ளத்தாக்கு மக்களின் வசதிக்காக, சில்சாரில் மினி தலைமைச் செயலகம் அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல, கவுகாத்தியில் திப்ருகர் மற்றும் சில்சாரை இணைக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலையை அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. எனக் கூறினார்.

Advertisement