கடல்மங்கலம் சாலை பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர்:நெல்வாய் கூட்ரோடு -- திருமுக்கூடல் சாலையில் இருந்து பிரிந்து, தோட்டநாவல் வழியாக கடல்மங்கலம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் உத்திரமேரூர், வாலாஜாபாத், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலை முறையான பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, நான்கு மாதங்களுக்கு முன், 2024 -- 25ம் நிதியாண்டில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 1.81 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. தற்போது, சேதமடைந்த சாலை பெயர்த்து அகற்றப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், ஜல்லிக் கற்கள் பரப்பி உருளை வண்டி மூலம் அழுத்தப்பட்டு உள்ளன. அவ்வழியே, லாரி, டிராக்டர் ஆகிய வாகனங்கள், தொடர்ந்து சென்று கொண்டே இருப்பதால், ஜல்லிக் கற்கள் பெயர்ந்து உள்ளன.
இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, கடல்மங்கலம் சாலை அமைக்கும் பணியை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.