தொடரை வெல்லுமா இந்தியா * நான்காவது 'டி-20' ல் எதிர்பார்ப்பு

புனே: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது 'டி-20' போட்டி புனேயில் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி தொடரை கைப்பற்றலாம்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா, மூன்றாவது போட்டியில் சறுக்கியது. எனினும் தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது போட்டி மஹாராஷ்டிராவில் உள்ள புனேயில் நடக்கிறது.
சாம்சன் திணறல்
இந்திய அணி துவக்க வீரர் சாம்சன். வங்கதேசம், தென் ஆப்ரிக்க தொடரில் 130 முதல் 140 கி.மீ., வேகத்தில் பவுலிங் செய்த டஸ்கின், தன்ஜிம் (வங்கதேசம்), சைம்லேன், சிபம்லா (தெ.ஆப்.,) பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 3 சதம் விளாசினார். தற்போது 3 போட்டியில் 26, 5, 3 என ஏமாற்றினார்.
மணிக்கு 145 முதல் 155 கி.மீ., வேகத்தில் பந்துவீசும் ஆர்ச்சர், மார்க் உட் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். 3 முறையும் ஆர்ச்சர் பந்தில் வீழ்ந்தார். புதிய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ, சாம்சனுக்கு 'அட்வைஸ்' தந்தால் நல்லது.
அபிஷேக் சர்மா (79, 12, 24 ரன்) ஆறுதல் தந்தாலும், கேப்டன் சூர்யகுமார் (0, 12, 14) மீண்டு வந்தால் அணிக்கு உற்சாகம் கிடைக்கும். பின் வரிசையில் திலக் வர்மா (19, 72, 18), ஹர்திக் பாண்ட்யா (3, 7, 40) மீண்டும் வெற்றிக்கு போராட வேண்டும்.
வாஷிங்டன் சுந்தர் (26, 6) கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அணிக்கு சிறப்பான 'பினிஷிங்' தர வேண்டும். துருவ் ஜுரல் (2, 4) தடுமாறுவதால், எதிரணியின் சுழலை சமாளிக்க, ஷிவம் துபேவை சேர்த்தால் நல்லது.
வருவாரா அர்ஷ்தீப்
பும்ரா இல்லாத நிலையில் 'பவர் பிளே' ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் அர்ஷ்தீப், அணிக்கு திரும்பலாம். தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால், முகமது ஷமி இவருக்கு வழிவிடலாம். சுழலில் 3 போட்டியில் 10 விக்கெட் சாய்த்த வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் (5), பிஷ்னோய் (1), வாஷிங்டன் சுந்தர் (1) ஆறுதல் தருகின்றனர். 'ஆல் ரவுண்டர்' பாண்ட்யா (5) தன் பங்கிற்கு உதவுகிறார்.
வெற்றி மகிழ்ச்சி
மூன்றாவது போட்டியில் ஒரு கட்டத்தில் 127/8 என திணறிய இங்கிலாந்து, பின் 171/9 ரன் குவித்து வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் பட்லர் (137 ரன்) பலம் சேர்க்கிறார். டக்கெட், லிவிங்ஸ்டனும் எழுச்சி பெற்றுள்ளனர். வேகத்தில் ஆர்ச்சர் (5), கார்ஸ் (5), சுழலில் ரஷித் (3) இந்திய வீரர்களுக்கு தொல்லை தர காத்திருக்கின்றனர்.

மைதானம் எப்படி
புனே மைதானத்தில் இந்தியா 4 போட்டியில் பங்கேற்று, 2ல் வென்றது (2 தோல்வி). இங்கிலாந்துக்கு எதிராக இங்கு மோதிய ஒரு போட்டியில் (2012) இந்தியா வெற்றி பெற்றது.
* கடைசி இரு போட்டியில் முதலில் விளையாடிய அணி 200 ரன்னுக்கும் மேல் குவித்து வென்றுள்ளது. இதனால் 'டாஸ்' வெல்லும் அணி இன்று பேட்டிங் தேர்வு செய்யலாம்.

Advertisement