அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி 67 பேர் பலி?

1

ஆர்லிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் தரையிறங்க முயன்ற பயணியர் விமானமும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், விமானத்தில் பயணித்த 64 பேரும், ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று வீரர்களும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் கான்சாசின் விசிடாவில் இருந்து வாஷிங்டனின் ரீகன் தேசிய விமான நிலையத்துக்கு, 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் பயணியர் விமானம் நேற்று முன்தினம் இரவு பயணம் மேற்கொண்டது. இதில், 60 பயணியர் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் இருந்தனர்.

ரீகன் விமான நிலையத்தில் இறங்குவதற்கு அந்த விமானத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து சில ஆயிரம் அடிகள் தொலைவில், 400 அடி உயரத்தில் அந்த விமானம் இருந்தபோது, ராணுவ ஹெலிகாப்டருடன் நேரடியாக மோதியது.

தீப்பிழம்புகளுடன் இரண்டும், விமான நிலையம் அருகில் உள்ள போடோமாக் நதியில் விழுந்தன. உடனடியாக விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. நேற்று இரவு வரை 28 உடல்கள் மீட்கப்பட்டது.

விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் தீப்பிடித்து வெடித்து சிதறியதால், அவற்றில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

பயணியர் விமானத்துக்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் திடீரென அந்தப் பாதைக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், நடுவானில் இரண்டும் மோதிக் கொண்டதாக முதலில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement