ஜப்பான் சென்ற மாருதி 'ஜிம்னி'
சென்னை:உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 'மாருதி சுசூகி'யின் ஆப்ரோட் எஸ்.யூ.வி.,யான, ஐந்து கதவுகள் கொண்ட 'ஜிம்னி' கார், முதல் முறையாக ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுசூகியின் தாய் நாடான ஜப்பானில், 'ஜிம்னி நோமாட்' என்ற பெயரில் அறிமுகமாகி உள்ளது.
இது, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இரண்டாவது மாருதி கார். இதற்கு முன், கடந்த ஆண்டு ஆகஸ்டில், 'ப்ரான்க்ஸ்' கார் ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில், இரண்டாவது அதிகம் ஏற்றுமதியான மாருதி காராகவும் ஜிம்னி உருவெடுத்துள்ளது.
ஹரியானாவின் குருகிராமில் இது உற்பத்தி செய்யப்படுகிறது. உலக அளவில், 199 நாடுகளில், இதுவரை 35 லட்சம் ஜிம்னி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னி கார் ஜப்பான் சந்தையில் இருக்கும் நிலையில், முதல் முறையாக ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னி கார் அறிமுகமாகி உள்ளது.