போக்குவரத்து துறைக்கு ஆட்டோ டிரைவர்கள் கேள்வி
சென்னை:தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 12 ஆண்டுகளாக புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, ஆட்டோ ஓட்டுநர்கள் தாங்களாகவே, ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளனர். 'நாளை முதல் குறைந்தபட்ச கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும்' என, ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 'ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னிச்சையாக கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது; அது விதி மீறல்' என, போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாஹீர் ஹுசைன் கூறியதாவது:
பெட்ரோல், உதிரி பொருட்களின் விலை, பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த தொழிலை நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கும் வரை, சென்னையில் பிப்ரவரி, 1 முதல், குறைந்தபட்ச கட்டணமாக, 1.8 கி.மீ.,க்கு 50 ரூபாய் என, வசூலிக்க உள்ளோம்.
அதேபோல, கூடுதல் கி.மீ.,க்கு 18 ரூபாய், ஐந்து நிமிடத்துக்கு மேல் காத்திருப்பு கட்டணமாக, நிமிடத்துக்கு 1.50 ரூபாய் வசூலிப்போம். போக்கு வரத்து துறை அமைச்சர் இதுவரை எங்கள் கோரிக்கை குறித்து பேசவில்லை. போக்குவரத்து ஆணையரகமும் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. தமிழகத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி சேவைகளை வழங்கி வரும், ஓலா, ஊபர் நிறுவனங்கள், குறைந்தபட்ச கட்டணமே, 70 ரூபாய் வசூலிக்கின்றன.
அவர்கள் மீது போக்கு வரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக போக்கு வரத்து துறை எப்போது அழைத்தாலும், நாங்கள் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.