சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: பி.சி.சி.ஐ., கவுரவம்
மும்பை: பி.சி.சி.ஐ.,யின் வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது.
இந்திய ஜாம்பவான் சச்சின் 51. மும்பையை சேர்ந்த இவர், தனது 16வது வயதில் (1989) கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடந்த 2013ல் ஓய்வு பெற்ற சச்சின், 200 டெஸ்ட் (15,921 ரன், 51 சதம்), 463 ஒருநாள் (18,426 ரன், 49 சதம்), ஒரே ஒரு 'டி-20' (10 ரன்) என, 664 சர்வதேச போட்டிகளில் விளையாடினார். சர்வதேச அரங்கில் சதத்தில் சதம், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் என பல்வேறு சாதனைகள் படைத்தார்.
சச்சினை கவுரவிக்கும் விதமாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 'சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு' தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இன்று நடக்கவுள்ள பி.சி.சி.ஐ.,யின் வருடாந்திர விழாவில் சச்சினுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதை பெறும் 31வது வீரர் ஆனார் சச்சின்.
இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டனான சி.கே. நாயுடுவை கவுரவப்படுத்தும் விதமாக கடந்த 1994 முதல், அவரது பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது வென்ற முதல் வீரர் லாலா அமர்நாத் (1994). கடைசியாக 2023ல் பரூக் இன்ஜினியர், ரவி சாஸ்திரிக்கு இவ்விருது வழங்கப்பட்டது. கவாஸ்கர் (2012), கபில்தேவ் (2013), ஸ்ரீகாந்த் (2019) ஆகியோரும் இவ்விருது வென்றனர்.
பும்ரா, மந்தனா தேர்வு
பி.சி.சி.ஐ.,யின் சிறந்த வீரருக்கான 'பாலி உம்ரிகர்' விருதுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர், 2018-19, 2021-22ல் இவ்விருது வென்றிருந்தார். சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர் ஸ்மிருதி மந்தனா தேர்வானார்.