பைனலுக்கு முன்னேறியது இந்தியா: பெண்கள் 'டி-20' உலக கோப்பையில்

கோலாலம்பூர்: 'டி-20' உலக கோப்பை (19 வயது) பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. அரையிறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. கோலாலம்பூரில் நடந்த அரையிறுதியில், 'நடப்பு சாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு ஜெமிமா ஸ்பென்ஸ் (9), ட்ரூடி ஜான்சன் (0) ஏமாற்றினர். டேவினா பெர்ரின் (45), கேப்டன் அபிகேல் நோர்க்ரோவ் (30) ஓரளவு கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 113 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் பருனிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா தலா 3, ஆயுஷி சுக்லா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கமலினி, திரிஷா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது திரிஷா (35) அவுட்டானார். போப் பிரெட் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கமலினி, 47 பந்தில் அரைசதம் கடந்தார். இந்த ஓவரின் கடைசி பந்தை மீண்டும் பவுண்டரிக்கு அனுப்பிய கமலினி வெற்றியை உறுதி செய்தார்.
இரண்டாவது முறை: இந்திய அணி 15 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கமலினி (56 ரன், 8 பவுண்டரி), சானிகா (11) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக (2023, 2025) பைனலுக்கு முன்னேறியது. கடந்த முறை நடந்த பைனலில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.




ஆஸி., ஏமாற்றம்


மற்றொரு அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி (106/5, 18.1 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை (105/8, 20 ஓவர்) வீழ்த்தி, முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தது. நாளை, கோலாலம்பூரில் நடக்கவுள்ள பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

Advertisement