'அறத்துடன் வாழ்வதே இன்பம்'

திருப்பூர், : கடந்த, 23ம் தேதி துவங்கிய திருப்பூர் புத்தக கண்காட்சி நேற்று நிறைவடைந்தது.

நேற்று, 'இலக்கியங்களை நாம் கற்பது - இன்புற்று வாழவே... பின்பற்றி வாழவே' என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் தலைமை வகித்தார். சொற்பொழிவாளர்கள் பூங்கொடி, நாகமுத்துபாண்டியன் ஆகியோர் இன்புற்று வாழவே என்ற அணியில் பேசினர். கண்ணன், இந்திரா விஜயலட்சுமி ஆகியோர், பின்பற்றி வாழவே என்ற அணியில் பேசினர்.

பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசியதாவது:

மூன்றாம் நுாற்றாண்டில் துவங்கி, 21 ம் நுாற்றாண்டு வரை, பக்தி இலக்கியங்களே அதிகம் இயற்றப்பட்டன. நம்மை போல்வேறு யாரிடமும் பக்தி இலக்கியங்கள் இல்லை. திருக்குறளில் உள்ள முதல் 10 குறளில், கடவுள் வாழ்த்து என்றாலும், கடவுள் என்ற சொல் இருக்காது; தெய்வம் என்று கூறியுள்ளார். எந்த சுவாமி பெயரையும் கூறவில்லை. பாதத்தை மட்டுமே கூறுவார். நிமிர்ந்து பார்த்தால் முகம் தெரிந்துவிடும் என்பதால், நுணுக்கமாக கூறியிருக்கிறார்.

தமிழருக்கானது மட்டு மல்ல, மனிதருக்கானது என்பதை உணர்த்தும் வகையில், 'தமிழ்' என்ற சொல் குறளில் இடம்பெறவில்லை. சில நுால்கள், ஆசை காட்டி அறம் கூறுகின்றன; மற்றவை அச்சத்தை காட்டி அறம் கூறுகின்றன. அறத்தை முன் னிறுத்தி அறம் கூறுவது திருக்குறள் மட்டும்தான்.

படிக்க படிக்கத்தான் புதிய அறிவு பிறக்கும்; புதிய விஷயம் தெரியவரும். ஒவ்வொரு நாளும் புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். புதியதை படிக்க வேண்டும்; தெரியாததை படிக்க வேண்டும். இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அறத்தை கற்றுணர்ந்து பின்பற்றி வாழ்ந்தால், வாழ்வில் இன்புற்று வாழலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement