மலையில் வனம், நீரோடைகளில் குவியும் பிளாஸ்டிக்... கழிவுகளால் சூழலுக்கு ஆபத்து!
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகள், நீரோடைகளில் கொட்டப்படும் 'பிளாஸ்டிக்' கழிவுகளால் வன உயிரினங்களுக்கும்; சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில், 5,520 சதுர கி.மீ., பரப்பளவிலான வனப்பகுதி, தமிழகம், கர்நாடகா, கேரளாவில் உள்ளது.
அதில், வனப்பகுதி அதிகமாக உள்ள நீலகிரியில், வனப்பகுதிகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்கள், மலை பாதையோர தனியார் வனப்பகுதி, கட்டட காடுகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, 'பிளாஸ்டிக்' பாதிப்பு என்பது ஒழிக்க முடியாத சவாலாக உள்ளது.
தடை இருந்தும் பயனில்லை
நீலகிரியில், கடந்த, 2018 ஜூன், 9ல் மாவட்டத்தில் பிளாஸ்டிக், பேப்பர் கப் உட்பட, 21 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து. 2019 ஆக., 15 முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 2020 ஜன., முதல், மட்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 'பிளாஸ்டிக்' ஒழிப்பு விழிப்புணர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரியில், பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக, பொய் அறிக்கை தாக்கல் செய்ததாக, சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்களின் புழக்கம் தொடர்ந்து வருகிறது.
'பிளாஸ்டிக்' கவர் அதிகரிப்பு
சமவெளி பகுதிகளிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும், உணவு பொருட்கள் பேக் செய்யப்படும் பிளாஸ்டிக் கவர்களை, அரசால் கூட கட்டுப்படுத்த முடிய வில்லை. ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.
நீலகிரியின் நுழைவு வாயிலான பர்லியார் முதல், குன்னுார் வரையிலான மலைபாதையில், சுற்றுலா பயணிகளால் வீசப்படும் 'பிளாஸ்டிக்' பாட்டில்கள்; கவர்களுக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது. இதே போல, சுற்றுலா மையங்களை சுற்றியுள்ள நீரோடைகளிலும் பயணிகளால் பிளாஸ்டிக் கழிவுகள் வீசப்படுகிறது.
வன விலங்குகளுக்கு பாதிப்பு
சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர் ஆல்தொரை கூறுகையில்,''வனப்பகுதிகள் உட்பட ஆங்காங்கே வீசும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட குப்பைகள் நீரோடை, சிற்றாறுகளில் கலந்து வனத்தின் சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்க செய்கிறது. யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்கள் கழிவுகள் கலந்த குடிநீரை குடிப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.
மட்கும், மட்காத குப்பைகளை பிரித்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வனப்பகுதியில், குப்பைகள் கொட்டுவோர் மீது, வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சில இடங்களில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தனியார் நிறுவனங்களால் வனத்திலும் கொட்டப்பட்டு வருகின்றன. இவை மழை காலங்களில் நீரோடைகளில் கலந்தும் விடுகிறது.
குன்னுார் வழியாக சென்று சமவெளியில் உள்ள பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. 'பிளாஸ்டிக் ஒழிப்பு' விழிப்புணர்வு வெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் முடிந்து விடாமல், களத்திலும் முழுமை பெற்றால் மட்டுமே தீர்வு கிடைக்கும்,'' என்றார்.