சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி: இன்று மாலை முதல் டிக்கெட் விற்பனை

துபாய்: இந்தியாவின் மூன்று குரூப்-ஸ்டேஜ் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மற்றும் துபாயில் நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று மாலை முதல் தொடங்கும் என்று ஐ.சி.சி., அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் உலகின் முன்னணி எட்டு அணிகள் பங்கேற்கும். இந்திய அணிக்கான போட்டிகள் துபாயில் நடக்கிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(பிப்.3) மாலை 5.30 மணி முதல் தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை நேரில் பார்க்க ஆர்வமாக உள்ள ரசிகர்கள், அதிகாரப்பூர்வ தளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் பங்குதாரர்கள் மூலம் ஆன்லைனில் டிக்கெட் வாங்கலாம். இந்தியாவின் போட்டிகளுக்கான டிக்கெட் தேவை அதிகமாக இருப்பதால், இடங்களைப் பாதுகாப்பாகப் பெற விரைவாக முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் திட்டமிடப்பட்டுள்ள 10 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கடந்த வாரம் பொது விற்பனைக்கு வந்துவிட்டன.

மார்ச் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள், துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டி முடிந்த பிறகு வெளியிடப்படும் என்று ஐ.சி.சி.,தெரிவித்துள்ளது.

Advertisement