தமிழகத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; என்.ஐ.ஏ., அதிரடி

11

சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக, தமிழகத்தில் செயல்பட்ட 2 முக்கிய நபர்களை என்.ஐ.ஏ., அமைப்பினர் கைது செய்துள்ளனர்.


@1brசென்னை ராயப்பேட்டையில், அலுவலகம் ஒன்றை அமைத்து தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தக்ரீர் என்ற இயக்கத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்து இயங்குவதாக கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணையும் நடத்தினர்.


விசாரணையில் ஹமீது உசேன், அகமது மன்சூர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கடந்த ஜூலை, செப்டம்பர் ஆகிய மாதங்களில் என்.ஐ.ஏ., அமைப்பினர் அதிரடி ரெய்டில் இறங்கினர். அப்போதும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில், இதே இயக்கத்துக்கு மேலும் சிலர் ஆதரவு அளித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் என்.ஐ.ஏ., அமைப்பினர் குறிப்பிட்ட சிலரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் ஒரு கட்டமாக இன்று (பிப்.3) சென்னையில் 3 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. முடிச்சூர், குன்றத்தூர் பகுதிகளில் சோதனையின் போது 2 பேர் சிக்கினர்.


திருவாரூர், மன்னார்குடியிலும் என்.ஐ.ஏ., பிரிவினர் திடீர் சோதனையில் இறங்கினர். இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்துக்கு ஆதரவு அளித்த வழக்கில் 2 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக என்.ஐ.ஏ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கில் 2 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் கபீர் அகமது, பாவா பக்ரூதின் என்னும் மன்னை பாவா என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது.


இவர்கள் இருவரும் ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்துக்கு ஆதரவாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் இணைந்து ரகசிய சந்திப்புகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விட்டன.


அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கபீர் அகமது, பாவா பக்ரூதின் இருவருக்கும் ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதே இயக்கத்துக்கு சர்வதேச அளவில் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா, ஹிஸ்ப் உத் தக்ரீர் இயக்கத்திற்கு நிதி உதவி அளித்துள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.


இவ்வாறு என்.ஐ.ஏ., செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement