தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

9

புதுடில்லி: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2025-26ம் நிதியாண்டில் 6,626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் அ.திமு.க.,உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி இருந்தன.

இந்நிலையில் டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

கடந்த 2009-14 காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சிகாலத்தில் , தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது 2025-26 பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு என ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது 2009- 14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 879 கோடி ரூபாயை காட்டிலும், 654 சதவீதம் அதிகமாகும்.


இதில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.மொத்தமாக2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33.467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள் மற்றும் 9 இரட்டை வழி பாதை திட்டங்கள் அடங்கும். இவற்றில் புதிய ரயில் பாதைக்கு ரூ.246 கோடியும் அகலப் பாதை திட்டத்திற்கு ரூ.478 கோடியும் இரட்டை வழி பாதைக்கு ரூ.812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நடப்பு நிதியாண்டில் மேற்கண்ட திட்டங்களுக்கு ரூ.1,536 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Advertisement