பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை; லோக்சபாவில் ராகுல் பேச்சு
புதுடில்லி: 'உற்பத்தி துறையில் இந்தியா பின்தங்கியுள்ளது. உற்பத்தி துறை மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் பேசியதாவது:
ஜனாதிபதி உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை. புதிதாக ஒன்றும் இல்லை. ஜனாதிபதி உரை என்பது இப்படி இருக்க கூடாது. நடந்ததையே திரும்பிச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாட்டின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது. உற்பத்தி துறை மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
உற்பத்தி துறை
நாட்டின் உற்பத்தி 15 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக தற்போது குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தீர்வு காணப்படவில்லை. பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை.
பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டம் குறித்து அடிக்கடி கூறுகிறார். நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும் அதானி நிறுவனத்துக்கே அரசு ஆதரவாக உள்ளது. வேலையில்லா பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார். நாட்டில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் உள்ளது.
மருத்துவம்
நம் நாட்டில் உற்பத்தியை ஒருங்கிணைக்கக் கூடிய மிகச் சிறப்பான நிறுவனங்கள் பல உள்ளன. டாட்டா, பஜாஜ் போன்ற பல நிறுவனங்கள் உற்பத்தி ஒருங்கிணைக்கின்றன. உற்பத்தி ஒருங்கிணைப்பை நாம் சீனாவிடம் வழங்கி இருக்கிறோம். உலகம் வேகமாக மாறி வருகிறது. போர், மருத்துவம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மாற்றம் உருவாகி வருகிறது. செல்போனின் அனைத்து உதிரி பாகங்களும் சீனாவில் தான் தயாரிக்கப்படுகின்றன. சமூக பதற்றம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மருத்துவம் கல்வி உணவு முறை அனைத்தும் மாறப்போகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.