கொல்ல சதி என பெண் ஏ.டி.ஜி.பி. அளித்த புகாரில் உண்மை இல்லை; டி.ஜி.பி. மறுப்பு
சென்னை; தம்மை கொல்ல சதி நடந்ததாக ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இங்கு திடீரென தீ விபத்து நிகழ பெரும் பரபரப்பு நிலவியது.
தீ விபத்தை சுட்டிக்காட்டிய ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்ததால் தம்மை கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந் நிலையில் கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்டு உள்ள விளக்கம் வருமாறு;
சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் நடந்த விசாரணையில் 31 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
கல்பனா நாயக் அறையில் வேண்டும் என்றே திட்டமிட்டு தீ வைத்ததாக ஆதாரங்கள் இல்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தீ வைக்கவில்லை. தீ விபத்து நடந்த அன்றே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு நாசவேலை காரணமல்ல.
அறையின் மின்கசிவு கசிந்தது என்பதற்கான தடயங்கள் இருந்ததாக தடயவியல் துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.