இரண்டு தங்கம் வென்றார் சதிஷ் குமார் * தேசிய விளையாட்டு பாட்மின்டனில்...
டேராடூன்: தேசிய விளையாட்டு பாட்மின்டன் ஒற்றையர், கலப்பு இரட்டையரில் தமிழக வீரர் சதிஷ் குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பாட்மின்டன் நடந்தது. முன்னணி வீரர் லக்சயா சென், கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் கருணாகரன், உத்தரகாண்ட்டின் சூர்யாக்ஸ் ராவத் மோதினர்.
இதில் சதிஷ் குமார் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
மீண்டும் அபாரம்
கலப்பு இரட்டையர் பைனலில் தமிழகத்தின் சதிஷ் குமார், ஆத்யா ஜோடி, பைனலில் மகாராஷ்டிராவின் தீப் ராம்பியா, அக்சயா ஜோடியை எதிர்கொண்டது. இதில் தமிழக ஜோடி 21-11, 20-22, 21-8 என போராடி வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது.
அன்மோல் வெற்றி
பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் ஹரியானாவின் அன்மோல், உத்தரகாண்ட்டின் அனுபமாவை சந்தித்தார். இதில் அன்மோல் 21-16, 22-20 என நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
பெண்கள் இரட்டையரில் கர்நாடகாவின் அஷ்வினி, ஷிகா ஜோடி, 21-17, 15-21, 21-12 என காயத்ரி, மானசா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றியது. தமிழகத்தின் வர்ஷினி, அருள் பாலா ஜோடி வெண்கலம் வென்றது.
கூடைப்பந்தில் கலக்கல்
ஆண்களுக்கான கூடைப்பந்தில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகம், தெலுங்கானா மோதின. இதில் தமிழக அணி 21-16 என வெற்றி பெற்று, வெண்கலம் வசப்படுத்தியது. மத்திய பிரதேச அணி 22-20 என கேரளாவை வீழ்த்தி, தங்கம் வென்றது. கேரளாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
தினிதி '11'
கர்நாடகாவின் 15 வயது நீச்சல் வீராங்கனை தினிதி. தேசிய விளையாட்டு நீச்சலில் நேற்று 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் தங்கம் (57.34 வினாடி) கைப்பற்றினார். அடுத்து 4X100 மீ., ரிலே ஓட்டத்தில் சக கர்நாடக வீராங்கனைகளுடன் இணைந்து தங்கம் வசப்படுத்தினார். மொத்தம் 9 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றினார்.
நீச்சலில் மட்டும் கர்நாடக அணி 37 பதக்கம் (22 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம்) குவித்தது.
டேவிட் அசத்தல்
தேசிய விளையாட்டு சைக்கிளில் அந்தமான், நிக்கோபார் தீவுகள் வீரர் டேவிட் பெக்காம் (10.691 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூர் வீரர் ரொனால்டோ (10.724), அந்தமான் வீரர் எசோ ஆல்பென் (10.826) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.
* டைம் டிரையர் தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.