மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா: வெளியுறவு அமைச்சகம் தகவல்

6

புதுடில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களின் கைகளில் விலங்கு போட்டு, கால்களில் சங்கிலி மாட்டி ராணுவ விமானத்தில் கொண்டு வந்து இறக்கிய நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த பிரச்னை பார்லிமென்டில் புயலை கிளப்பியது. ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில், டில்லியில் நிருபர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: பிப்.,10 -12 தேதிகளில் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி பிப்.,12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பிறகு, மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும். அதிபரான பிறகு அவரை சந்திக்கும் வெகு சில தலைவர்களில் மோடியும் ஒருவர் ஆவார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நாடு கடத்தப்படுபவர்களை, முறையாக கையாள வேண்டும் என அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

2012 ல் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரத்தில், இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது.

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் என கூற முடியாது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விளக்கம் அளித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு புகார்



இதனிடையே, அமெரிக்காவில் இருந்த சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் மோசமாக கையாண்ட விதம் குறித்த அமெரிக்கா அரசிடம் இந்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement