பிப்.10ல்  குடற்புழு நீக்கும் முகாம்  3.69 லட்சம் பேருக்கு மாத்திரை  

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்.,10ல் தேசிய குடற்புழு நீக்கம் முகாமில் ஒன்று முதல் 19 வயதிற்குட்பட்ட 3 லட்சத்து 69 ஆயிரத்து 570 மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்கம் முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது:

பிப்.,10ல் தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடக்கிறது. இதில் ஒன்று முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தை, மாணவர்களுக்கும், 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கும் அல்பன்ட்சோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

இந்த மாத்திரையை கொடுப்பதால் குடலில் உள்ள புழுத்தொற்று நீங்குவதுடன், ரத்த சோகை குறைபாடு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு மற்றும் படிப்பில் ஆர்வமின்மை ஆகியவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.

மாவட்டத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 570 மாணவர்கள், குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுள்ள 84 ஆயிரத்து 280 (பாலுாட்டும் தாய்மார்களை தவிர்த்து) பெண்களுக்கும் வழங்கப்படவுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து அங்கன் வாடிகளிலும் பிப்.,10ல் வழங்கப்படும். விடுபட்டபவர்களுக்கு பிப்.,17 ல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார். மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement