எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்

சென்னை: தினகரன், பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை முறியடிக்க, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து, தற்போது ஒதுங்கியுள்ள நபர்களை தேடிச்சென்று, 'கவனிப்பு' செய்யுமாறு கட்சி நிர்வாகிகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்திஉள்ளார்.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., வழிநடத்திய போது, கட்சியில் ஏழை, பணக்காரர், ஜாதி போன்றவை பார்க்காமல், உண்மை விசுவாசிகளுக்கு கட்சி பதவிகளை வழங்கினார். அதையே ஜெயலலிதாவும் பின்பற்றினார்.

அவர், சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்கி, எம்.பி., - எம்.எல்.ஏ., அமைச்சர் போன்ற பதவிகளை, சாதாரண தொண்டருக்கு வழங்கினார்.

இதனால், கட்சி தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர்களின் வெற்றிக்கு நிர்வாகிகள் உழைத்தனர். தொண்டர்களின் ஓட்டுகளும் சிதறாமல் கட்சிக்கு கிடைத்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் ஒன்றாக இருந்த பழனிசாமி, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே செயல்படுகின்றனர். பழனிசாமி வசம், அ.தி.மு.க., உள்ளது.

'பழனிசாமி தன் ஆதர வாளர்களுக்கு தான் பதவிகளை வழங்கியுள்ளார்; அவரிடம் உள்ளவர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் கிடையாது; தொண்டர்கள் கிடையாது; அவரிடம் இருந்து, 'கட்சியைக் கைப்பற்றியே தீருவோம்' என, தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் கூறுகின்றனர்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, பழனிசாமி, சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

எனவே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை வீடு தேடி சென்று, தேவைப்படும் உதவிகளை செய்து, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர்களையும் அழைத்து வருமாறு கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இதனால், தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் தரப்பின் விமர்சனங்களை முறியடிக்க முடியும் என, பழனிசாமி கருதுகிறார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement