திருவெற்றியூர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவாடானை: திருவெற்றியூர் கோயில் குளத்தில் நாளுக்கு நாள் செத்து மிதக்கும் மீன்கள் அதிகரித்துள்ளதால் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இரவு தங்கியிருந்து மறுநாள் காலையில் கோயில் குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு.

இதனால் பக்தர்கள் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்கி மறுநாள் அதிகாலையில் நீராடுவார்கள். இங்குள்ள தீர்த்த குளத்தில் 15 நாட்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தன. குளிக்கும் போது துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் முகம் சுளித்தனர். இதனால் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மீன்களை அகற்றும் பணி நடந்தது.

ஆனால் நாளுக்கு நாள் மீன்கள் இறப்பது அதிகரித்து வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், அழுக்கு துணிகள் துவைப்பது, சோப்பு போடுவது போன்ற பல காரணங்களால் தண்ணீரில் ஆக்ஸிஜன் குறைந்து விடும். இதனால் மீன்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறப்பதாக தெரிவித்தனர்.

Advertisement