உ.பி., இடைத்தேர்தல்; சமாஜ்வாதிக்கு ஷாக் கொடுத்த பா.ஜ.,

4



லக்னோ: உத்தரபிரதேசம் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை 61 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பா.ஜ., வெற்றி பெற்றது.



உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டது மில்கிபூர் சட்டசபை தொகுதி. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ளது இந்த பகுதி தான்.
கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். அவர் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி சார்பில், பைசாபாத் தொகுதி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ.,வுக்கும் சமாஜ்வாதிக்கும் கடும் போட்டி நிலவியது. சமாஜ்வாதி சார்பில், எம்.பி., அவதேஷ் பிரசாத்தின் மகன் அஜித் பிரசாத் போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் சந்திரபானு பஸ்வான் போட்டியிட்டார்.
மொத்தம் 64.02 சதவீத ஓட்டுகள் பதிவாகின. பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது.

மொத்தம் 30 சுற்றுகளாக எண்ணப்பட்ட இந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 1,46,397 ஓட்டுக்களை பெற்று வென்றார். சமாஜ்வாதி வேட்பாளர் 84,687 ஓட்டுக்கள் பெற்றார். இதன்மூலம், 61,710 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றது.


லோக்சபா தேர்தலில் பைசாபாத் தொகுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக பா.ஜ., கட்சியினர் தெரிவித்தனர்.

உ.பி., துணை முதல்வர் கேஷவ் பிரசாத் கூறுகையில், 'இது வெறும் டிரெய்லர் தான். 2027ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்த படத்தையும் காட்டுவோம். அப்போது, சமாஜ்வாதி என்ற கட்சியே இருக்காது,' எனக் கூறினார்.

Advertisement