மக்கள் முடிவை பணிவுடன் ஏற்கிறோம்: ராகுல்

10

புதுடில்லி: '' டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் '', என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


டில்லி சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ., 23 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. டில்லியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் இந்த முறையும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக எந்த தொகுதிகளிலும் கூட முன்னிலை கூட பெற முடியவில்லை. இது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்று் கொள்கிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்த வாக்காளர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாசுபாடு, பணவீக்கம், ஊழலுக்கு எதிராகவும், டில்லியின் வளர்ச்சி மற்றும் மக்களின் உரிமைக்கான காங்கிரசின் போராட்டம் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

மாற்றத்தை விரும்பி



வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா கூறியதாவது: மக்கள் மாற்றத்தை விரும்பி ஓட்டளித்து உள்ளனர். ஆட்சியில் இருந்தவர்கள் நடந்து கொண்ட விதத்தால் விரக்தி அடைந்து மாற்றத்தை விரும்பியுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Advertisement