திருமண விழாவில் அழையா விருந்தாளி; உறவினர்கள் அலறியடித்து ஓட்டம்

7

லக்னோ: திருமண நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக வந்த சிறுத்தையை கண்டு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் உ.பி.,யில் நடந்துள்ளது.

உ.பி., மாநிலம் லக்னோவில் அக்சய் ஸ்ரீவஸ்தவாவும், ஜோதி குமாரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று இரவு திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நடந்தது. அப்போது, திடீரென சிறுத்தை ஒன்று மண்டபத்திற்குள் புகுந்தது. இதனை பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து ஓடினர். மணமகனும், மணமகளும் ஓடிச்சென்று காருக்குள் பூட்டிக் கொண்டனர். மண்டபத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனடியாக போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிறுத்தையை தேடத் துவங்கினர். 5 மணி நேரத்திற்கு பிறகு மண்டபத்தின் முதல் மாடியில் அறை ஒன்றில் சிறுத்தை பதுங்கி இருந்தது கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த சிறுத்தையை பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. கேமராமேன்கள் இரண்டு பேரும் காயமடைந்தனர். கடைசியில் 3:30 மணிக்கு சிறுத்தையை கூண்டு வைத்து அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். பிறகு, வழக்கம்போல் திருமண நிகழ்ச்சிகள் நடக்கத் துவங்கின.

Advertisement