சத்யேந்திர ஜெயின் மீது விசாரணை நடத்த ஈ.டி.,க்கு ஜனாதிபதி அனுமதி

புதுடில்லி, : டில்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது சட்டவிரோத பணபரிமாற்ற மோசடி வழக்கை விசாரிக்க, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்துள்ளார்.

கடந்த 2015 - 16ம் ஆண்டு டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். அப்போது அவர், தன் வருமானத்துக்கு மீறி 1.47 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், அதற்காக போலி நிறுவனங்கள் துவங்கி, அதன் வாயிலாக ஹவாலா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதன் வாயிலாக, 4.81 கோடி ரூபாய் முறைகேடாக அனுப்பியதும் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் 2017ல் சத்யேந்திர ஜெயின் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதேபோல் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் ஏற்கனவே அவர் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால், அதன் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கிரிமினல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா சட்டத்தின், 218வது பிரிவின்படி அரசு ஊழியர்கள், நீதிபதிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவது அவசியம்.

இதையடுத்து, சத்யேந்திர ஜெயின் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்த அனுமதிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. தற்போது, இந்த விசாரணைக்கு அவர் அனுமதி அளித்துள்ளார்.

Advertisement