வரி தர மாட்டோம் என்று சொல்ல ஒரு வினாடி போதும்: கடலுார் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கடலுார்:''மத்திய அரசுக்கு வரியை தர மாட்டோம் என்று சொல்ல ஒரு வினாடி போதும்,'' என்று கடலுாரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கடலுார் மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாநிலங்களின் வளர்ச்சியால் நாடு பயன் பெறும். ஆனால் மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுகிறது. மாநில வளர்ச்சியை தடுக்கிறது. ஜி.எஸ்.டி., மூலம் நிதி வளத்தை மொத்தமாக கபளீகரம் செய்கின்றனர். மாநில நிதியை தர மறுக்கின்றனர்.
மாநில அரசுகளுக்கு புதிய திட்டம் அறிவிக்க மறுக்கின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிறைவேற்ற திட்டங்களுக்கு நிதி தர மறுக்கின்றனர். இதையும் தாண்டித்தான் திட்டங்களை தீட்டி வருகிறோம்.
அது தான் அவர்கள் கண்ணை உறுத்துகிறது. அப்படியும் பல்வேறு தடைகளை உருவாக்குகின்றனர். புதிய புதிய சட்டங்கள் மூலமாக தடை உருவாக்குகின்றனர்.
தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நம் பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்கப் பார்க்கின்றனர். 'படிக்கக்கூடாது. பள்ளிக்கூடம் செல்லக்கூடாது. வேலையை அடையக்கூடாது' என்று எண்ணி அப்படி செய்கின்றனர்.
நாம் கொண்டு வந்த சமூக நீதியை சிதைக்கத்தான் தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. தடை உருவாக்கி தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கின்றனர்.
தமிழக மாணவர்களுக்கான, ஆசிரியர் சம்பளத்துக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட கூடிய 2152 கோடி ரூபாய் நிதி உடனடியாக விடுவியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் என்ற முறையில் கடிதம் எழுதினேன்.
அதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அனுப்பியுள்ளார். 'கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்' என்று அறிவுரை சொல்கிறார்.
அரசியல் செய்வது நீங்களா, நாங்களா? மும்மொழிக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதி தருவோம் என்று பிளாக் மெயில் செய்வதற்கு பெயர் அரசியல் இல்லையா?
கல்விக்கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?
பல மொழிகள் கொண்ட இந்தியாவை ஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா? பல்வேறு மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் நாட்டை ஒற்றையக நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா?
ஒரு திட்டத்துக்கான நிதியை, இன்னொரு திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான
நிபந்தனையாக மாற்றுவது அரசியல் இல்லையா? நீங்கள் செய்வது அரசியலா, நாங்கள் செய்வது அரசியலா?
பி.எம்ஸ்ரீ திட்டம் ஏற்காமல் இருப்பதால் தமிழகம் 5000 கோடி இழப்பதாக சொல்லும் தர்மேந்திர பிரதான் அவர்களே, தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கிக்கொண்டிருக்கும் வரியை தர முடியாது என்று சொல்ல ஒரு நொடி போதும். மறந்துடாதீங்க.
கொடுத்துப்பெறுவது தான் கூட்டாட்சி தத்துவம். அது தான் இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதைக்கூட புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியாவை ஆள்வது பெரிய சாபக்கேடு.
தேசிய கல்விக்கொள்கை என்பது கல்வியை வளர்க்க கொண்டு வரவில்லை. ஹிந்தியை வளர்க்க கொண்டு வரப்பட்டுள்ளது. நேரடியாக கொண்டு வந்தால் எதிர்ப்பார்கள் என்று, கல்விக்கொள்கை என்ற முலாம் பூசி திணிக்கிறார்கள்.
தாய்மொழியை வளர்க்க எங்களுக்கு தெரியும். ஹிந்தி மொழியால் தாய்மொழியை தொலைத்தவர்களிடம் கேளுங்கள். உங்கள் சதித்திட்டத்தின் ஆபத்து புரியும்.
நீங்கள் வந்து தான் வளர்ப்பீர்கள் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை. மத்திய அரசுக்கு நான் கடும் எச்சரிக்கை விடுக்கிறேன். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்க ஆசைப்படாதீர்கள்.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான எந்த செயல்பாடும் நான் இருக்கிற வரைக்கும் தி.மு.க., இருக்கிற வரைக்கும் இந்த மண்ணுக்குள் வர முடியாது.
மக்கள் முன்னேற்றம் ஒரு பக்கம். அதற்கான தடைகளை உடைப்பது இன்னொரு பக்கம். இரு பாதை பாய்ச்சல் தமிழக அரசு நடத்துகிறது.இதுபோன்ற தடைகள் புதிதல்ல. தடைகள் எந்தப்பக்கம் இருந்து வந்தாலும் உடை என்று பழகியவர்கள் நாங்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.











மேலும்
-
மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு; ஒருதலை காதலா என விசாரணை
-
கட்சிக்கு இது களையுதிர் காலம்; சீமான்
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
லோகோ பைலட்டுகள் இளநீர், இருமல் மருந்து சாப்பிட தடை; உத்தரவை வாபஸ் வாங்கிய ரயில்வே நிர்வாகம்!
-
சென்னையில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; போலீசார் அதிரடி
-
போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார்; முதல் முறையாக அறிவித்த டாக்டர்கள்