மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு; ஒருதலை காதலா என விசாரணை

1

குளித்தலை; குளித்தலை அருகே கிணற்றில் இருந்து கல்லூரி மாணவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


கரூர் குளித்தலை அருகே உள்ள சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். தொட்டியம் அருகே உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்றிரவு முதல் அருண்குமார் காணவில்லை என்று தெரிகிறது.


இதையடுத்து, பெற்றோரும், உறவினர்களும் மாணவர் அருண்குமாரை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் எங்கே உள்ளார் என்பது தெரியாத நிலையில், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.


இந் நிலையில் அருண்குமார் வீட்டில் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றின் அருகே அருண்குமாரின் காலணிகள் கிடப்பது தெரிய வந்தது.இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி தேடினர். 1 மணி நேர தேடுதலுக்கு பின்னர், மாணவர் அருண்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் கை,கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டு இருந்தது.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கினர். நண்பர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர் ஒருதலையாய் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரது காதலை பெண் ஏற்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.


ஒரு மாதமாக, அருண்குமாரின் செல்போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர் விசாரணைக்கு பின்னரே இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும்.

Advertisement