இந்தாண்டு பார்லி., அடுத்தாண்டு சட்டசபையில்; கமல்ஹாசன் உற்சாகம்

49

சென்னை: ''இந்தாண்டு நமது குரல் பார்லிமெண்டிலும், அடுத்தாண்டு உங்கள் குரல் சட்டசபையிலும் ஒலிக்க போகிறது,'' என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறி உள்ளார்.


@1brநடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அங்கு கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது;


ஹிந்தியை திணிக்க முயன்றவர்களை தடுத்தவர்கள் இன்று நரைத்த தாடியுடன் கூட்டத்தில் இங்கே நின்று கொண்டு இருப்பார்கள். மொழிக்காக உயிரையே தமிழகத்தில் விட்டுள்ளனர். பச்சைக்குழந்தைக்கு என்ன வேண்டும் என்று தெரியும். தமிழனுக்கு தெரியாதா? என்ன மொழி வேண்டும், வேண்டாம் என்று. எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு.


நாம் வளர்த்த அந்த குழந்தைக்கு இன்று 8 வயது ஆகிறது. இந்தாண்டு நமது குரல் பார்லி.யில் ஒலிக்க போகிறது. அடுத்தாண்டு உங்கள் குரல் சட்டசபையில் ஒலிக்க போகிறது. அதற்கு கட்டியம் கூறும் விழாதான் இது.


ஒவ்வொரு ஆண்டையும் நாம் கொண்டாடி கொண்டே இருக்கலாம். இவை எல்லாம் முக்கியமான தருணங்கள். நாம் ஏறி வந்த படிக்கட்டுகள். மய்யத்தில் மாணவர்கள் இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.


மாணவர்களுக்கு என்ன இஷ்டமோ அதை தான் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, நான் சொல்வதை கற்றுக் கொள்ளவில்லை என்றால் கைச்செலவுக்கு காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் அரசு எந்த நிலைக்கு தள்ளப்படும் என்பதை சரித்திரம் சொல்லும்.


நான் இப்போது அரசியலுக்கு வந்ததே போதவில்லை. இருபது ஆண்டுக்கு முன்பே வந்திருக்க வேண்டும். அடுத்தாண்டு சட்டமன்றம் என்பது வெறும் பேச்சாக இருந்து விடக்கூடாது. நீங்கள் ஒளிரும் தீபம் என்றால் இன்னொருவருக்கு அதை ஏற்றி வைக்க வேண்டும்.


நான் முதல்வர் ஆவதற்காக இங்கு வரவில்லை. முதலில் இருந்து எல்லாத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். இது ஒரு நாடு, இதை பிரித்தாள முடியாது. அப்படி நினைப்பவர்கள் எல்லாம் நாட்டை விட்டு செல்ல வேண்டும். இதை நீங்கள் பல மொழிகளில் சொல்ல வேண்டும்.


ஆனால் நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது. நான் மொழி போராட்டத்தில் அரைடவுசர் போட்டுக் கொண்டு பங்கேற்ற பையன். இனிமேல் வலியுறுத்த மாட்டேன் என்று மேல் தலைமை வலியுறுத்திய பிறகு அமைதி அடைந்தோம். அதன்பிறகு நான் ஹிந்தி படம் கூட நடித்தேன். ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாது.


அதுமாதிரி, உங்கள் சாய்ஸ் என்னவென்று தமிழனிடம் விட்டுவிட்டால் சீன மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவான். அதற்காக ஆவண செய்ய வேண்டியது அரசாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் செய்யக்கூடாது.



இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement