தேர்வில் மோசடி என புகார்: பீஹாரில் பள்ளி மாணவன் சுட்டுக்கொலை

1

புதுடில்லி: பீஹாரில், பள்ளித்தேர்வில் மோசடி செய்ததாக ஏற்பட்ட தகராறில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், 2 பேர் காயமடைந்தனர்.

பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், மெட்ரிக்குலேஷன் பத்தாம் வகுப்பு தேர்வில் மோசடி செய்ததாகக் கூறி இரண்டு குழு மாணவர்கள் மோதிக்கொண்டனர். முதல் நாள் தொடங்கிய வாக்குவாதம், மறுநாள் மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மொத்தம் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.

இதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். ஒரு மாணவரின் காலிலும் மற்றொரு மாணவரின் முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நிலைமை இன்னும் பதட்டமாக உள்ளது. அசம்பாவிதம் தவிர்க்க அந்த பகுதியில் போலீஸ் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நாராயண் மருத்துவக் கல்லூரிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுவனின் குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தினர்.

Advertisement