ஒப்பந்ததாரரிடம் ரூ.18 ஆயிரம் லஞ்சம்: பழநி கோவில் செயற்பொறியாளர் கைது

7

திண்டுக்கல்: ஒப்பந்ததாரரிடம் 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பழநி கோவில் கட்டுமான பிரிவு செயற்பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கோவில் சார்பில் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தை ஒப்பந்ததாரர் செந்தில்குமார் என்பவர் கட்டி முடித்துள்ளார்.


கட்டிட பணிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.71 லட்சம் தரப்பட வேண்டும். இதில், இரண்டு தவணை நிதி ஏற்கனவே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டு விட்டது. மூன்றாவது தவணையான 21 லட்சம் ரூபாயை தர வேண்டுமானால், கமிஷன் தொகை 18 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று பழநி கோவில் கட்டுமான பிரிவில் அயல் பணியாக இருக்கும் செயற்பொறியாளார் பிரேம்குமார் கேட்டுள்ளார்.

பணம் கொடுக்க விருப்பம் இல்லாத செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கூறியபடி, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் இன்று பழநி கோவிலுக்கு சென்றார்.

அங்கிருந்த பிரேம்குமார், லஞ்சப்பணத்தை தமது அறையில் உள்ள மேசையில் வைத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அதை அவர் வைத்து விட்டு வெளியே வந்ததும், உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார், செயற்பொறியாளர் பிரேம்குமாரை கைது செய்தனர்.

புகாருக்கு ஆளானவர்


கைது செய்யப்பட்ட பிரேம்குமார் கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பொறியாளராக பணியாற்றியவர். இவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement