ஆசிரியர்களுக்கு 8 மாதமாக நியமன ஆணை தர மறுப்பது ஏன்: அன்புமணி கேள்வி

சென்னை: தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக நியமன ஆணை வழங்க மறுப்பது ஏன்? முறைகேடு செய்ய சதியா? என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புமணி அறிக்கை:
தமிழக அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததைக் கண்டித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர் பணியில் நியமிப்பதற்கான போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் நிறைவேற்றி விட்ட நிலையில், அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்.4 ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டன.
ஆள்தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டு 16 மாதங்கள் ஆகி விட்டன. தேர்வு நடத்தப்பட்டு ஓரு வருடம் முடிந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.
அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்றால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தற்போது பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3,192 பேரும் இரு தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் நியமனத்திற்கு முதல்வர் ஒப்புதல் அளித்து விட்டதாக செய்திகள் வெளியாயின. அதன்பின்னரும் 3 மாதங்களாகி விட்ட நிலையில், இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாதது நியாயம் அல்ல.
எனவே பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3,192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.





மேலும்
-
மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு; ஒருதலை காதலா என விசாரணை
-
கட்சிக்கு இது களையுதிர் காலம்; சீமான்
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
லோகோ பைலட்டுகள் இளநீர், இருமல் மருந்து சாப்பிட தடை; உத்தரவை வாபஸ் வாங்கிய ரயில்வே நிர்வாகம்!
-
சென்னையில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; போலீசார் அதிரடி
-
போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார்; முதல் முறையாக அறிவித்த டாக்டர்கள்