ரூ.180 கோடி; 90 ஏக்கர்; ரூ.1,000க்கு லீஸ் திரைத்துறையினருக்கு அன்பு பரிசு; அரசு சாதனை திரைத்துறையினர் வீடு கட்ட அன்பு பரிசு
சென்னை:திரைத்துறையினர் வீடு கட்டுவதற்காக, 180 கோடி ரூபாய் மதிப்புள்ள 90 ஏக்கர் அரசு நிலம், ஆண்டுக்கு வெறும் 1,000 ரூபாய் கட்டணத்தில், 99 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுஉள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பையனுாரில் திரைத்துறையினர் வீடுகள் கட்டிக் கொள்வதற்காக, 90 ஏக்கர் அரசு நிலத்தை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு, 2010ல் அரசு ஒதுக்கியது. 90 ஏக்கருக்கும் சேர்த்து ஆண்டுக்கு 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்; மூன்று ஆண்டுகளுக்குள் வீடுகளை கட்டி பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், வருவாய் துறை வாயிலாக அரசாணை வெளியிட்டது.
அதன்படி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 65 ஏக்கர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 10 ஏக்கர், தமிழ் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு 8 ஏக்கர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு 7 ஏக்கர் என, பிரிக்கப்பட்டன.
வீட்டுவசதி சங்கங்களின் வாயிலாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அந்தந்த சங்க உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், குடியிருப்புகள் கட்டப்படவில்லை என்பதால், அந்த அரசாணை காலாவதியானது.
தற்போது, தி.மு.க., அரசு மீண்டும் வந்த நிலையில், அந்த அரசாணையை புதுப்பித்து தர வேண்டும் என திரைத்துறை சங்கங்களைச் சேர்ந்தவர்கள், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியிடம் வலியுறுத்தினர். தற்போது, அந்த நிலத்தின் சந்தை மதிப்பு, 180 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆனாலும், திரைத்துறையினர் கோரிக்கை ஏற்கப்பட்டு, அரசாணை
தொடர்ச்சி 9ம் பக்கம்
ரூ.180 கோடி
3ம் பக்கத் தொடர்ச்சி
புதுப்பிக்கப்பட்டு உள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த நிர்வாகிகளிடம், மீண்டும் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலம் ஒப்படைப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான புதுப்பிக்கப்பட்ட அரசாணையை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் செல்வமணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ஆகியோரிடம், துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
பின், உதயநிதி கூறியதாவது:
தி.மு.க., அரசை பொறுத்தவரை, எப்போதும் கலைத்துறையினர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. திரை கலைஞர்கள் நலனின் என்றைக்கும் முழு அக்கறையோடு இந்த அரசு செயல்பட்டு இருக்கிறது.
அ
அந்த அடிப்படையில், 2010ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்க உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில், சென்னை கேளம்பாக்கம் அடுத்த பையனுாரில், 90 ஏக்கர் அரசு நிலம், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அரசாணைப்படி, அந்த இடத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டடங்களை கட்டி பயன்படுத்தி இருக்க வேண்டும். அதில் காலதாமதமாகி விட்டது. அந்த இடத்தின் சந்தை மதிப்பு, 180 கோடி ரூபாய் இருக்கும்.
திரைத்துரையின் நலன் கருதி, மீண்டும் அவர்களிடமே நிலத்தை குத்தகைக்கு விடும் வகையில், அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. அங்கு, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் செல்வமணி கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2010ம் ஆண்டு நிலத்தை வழங்கினார். அங்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு, 'ஹட்கோ' வாயிலாக, 490 கோடி ரூபாய் வங்கி கடனுக்கும் ஏற்பாடு செய்து தந்தார்.
ஆட்சி மாற்றத்தால், வீடு கட்டாததால் கடன் ரத்தாகி விட்டது; அரசாணையும் காலாவதியாகி விட்டது. மீண்டும் நிலத்தை பெற அழுத்தம் மேல் அழுத்தம் கொடுத்தோம். நிலத்தை மீண்டும் வழங்குவதில் சிக்கல்கள் இருந்தன. அதை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து, எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.எங்களுக்கு வழங்கிய நிலத்தில், 9,000 குடியிருப்புகள் கட்ட முடியும். வீடு வேண்டும் என, 3,000 பேர் அணுகியுள்ளனர்; 1,000 பேர் முன்பணம் கொடுத்துள்ளனர். விரைவில் வீடு கட்டும் பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு