எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு

100


கடலூர்: 'நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. ஹிந்தி மொழியும் நமக்கு எதிரி அல்ல' என கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.

கடலுார் மாவட்டத்தில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழாவில், 'அப்பா' எனும் புதிய செயலியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வியும், மருத்துவமும் இரு கண்கள். ஒவ்வொரு மாணவனும் தமிழகத்தின் சொத்து, கல்வித்துறையில் சாதனைகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

ஏற்க மாட்டோம்!



பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கும் உள்ளது.இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டுகிற கொள்கை தான் புதிய கல்வி கொள்கை. இதனை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தி இருக்கிறோம். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறோம்.

ரூ.10 ஆயிரம் கோடி



இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும். அவர்கள் பத்தாயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2 ஆயிரம் கோடி பணத்திற்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்து போட்டால் என்னவாகும்?கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னோக்கி நமது தமிழ் சமுதாயம் போய்விடும். அந்த பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்.

எதிரி அல்ல



உங்களது குழந்தைகளின் திறமை வளர வேண்டுமா? 3வது மொழி திணிக்கப்பட்டு உங்கள் குழந்தைகளின் படிப்பு தடைப்பட்டு போக வேண்டும் என்று நினைப்பீர்களா என பெற்றோர்களிடம் கேட்கிறேன். நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. ஹிந்தி மொழியும் நமக்கு எதிரி அல்ல. அதனை யார் விரும்புகிறார்களோ, அவர்கள் கே.வி., பள்ளியிலோ, வேறு வகையிலோ, படிப்பதை தமிழகம் ஒருபோதும் தடுத்தது இல்லை. தடுக்க போவதும் இல்லை.

திணிக்காதீர்கள்



ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள், திணிக்க நினைத்தால் தமிழர்களுக்கு தனி குணம் உண்டு என்பதை தமிழகம் காட்டிவிடும். இருமொழி கொள்கையால் தமிழர்களின் திறமை எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் உயிரை விட தமிழ்மொழியை நேசிக்கிறோம். எங்கள் மொழியை யார் அழிக்க நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement