கோவில் வளாகம் அருகே கழிவுநீர் தேங்குவதால் அவதி

மறைமலைநகர்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டிபுண்ணியம் ஊராட்சியில், 7 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள முக்கிய தெருக்களின் ஓரம் மழைநீர் செல்லும் வடிகால்வாய், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த கால்வாயில் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த கிராமத்தில் உள்ள பழமையான தேவநாத பெருமாள் யோக ஹயக்ரீவர் கோவில் வளாகத்தின் எதிரே கழிவுநீர் தேங்குவதால், பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:

யோக ஹயக்ரீவர் கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி தாம்பரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பள்ளி மாணவ- - மாணவியர் தேர்வு நேரங்களில் வந்து, பெருமாளை வணங்கிச் செல்கின்றனர்.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில், அதிக அளவில் வரும் பக்தர்கள், வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் போது, கழிவுநீரால் சிரமப்படுகின்றனர்.

எனவே, கோவில் அருகில் தேங்கும் கழிவுநீரை அகற்றவும், கால்வாயை துார்வாரவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement