உலக தடகளம்: குல்வீர் தகுதி

புதுடில்லி: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியாவின் குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) தகுதி பெற்றார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், சர்வதேச உள்ளரங்கு தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான 5,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங், பந்தய துாரத்தை 12 நிமிடம், 59.77 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்தார். இந்த இலக்கை 13 நிமிடத்திற்குள் கடந்த முதல் இந்திய வீரர் ஆனார் குல்வீர். தவிர இவர், 5,000 மீ., ஓட்டத்தில் ஆசிய உள்ளரங்கு சாதனை படைத்தார். இதற்கு முன், 2022ல் தாய்லாந்தின் கீரன் டுன்டிவேட், பந்தய துாரத்தை 13 நிமிடம், 08.41 வினாடியில் கடந்திருந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் செப். 13-21ல் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் குல்வீர் சிங் தகுதி பெற்றார். இதற்கான தகுதி இலக்காக 13 நிமிடம், 01.00 வினாடி என சர்வதேச தடகள கூட்டமைப்பு நிர்ணயித்துள்ளது.


ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் (2023) வெண்கலம் வென்ற குல்வீர் சிங் கூறுகையில், ''இப்போட்டியில் புதிய இலக்கை அடைந்து, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி,'' என்றார்.

Advertisement