முன்கூட்டியே அடைக்கும் கடனுக்கு அபராதம் கூடாது: ஆர்.பி.ஐ.,

புதுடில்லி:தனி நபர்கள், சிறு, குறு நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்த முன்வரும்போது, அதற்கு வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. அப்படி எந்த அபராதமும் இன்றி, கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த அனுமதியளிக்க, வங்கிகளை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான வரைவு முன்வடிவையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

மாறுபட்ட வட்டி விகிதங்களைக் கொண்ட கடன் திட்டங்களுக்கு மட்டுமே, இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. தனி நபர் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் வணிக தேவைகளுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு, முதற்கட்ட இரண்டாம் கட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிளைத் தவிர, பிற வங்கிகள் இந்த வசதியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, காலக்கெடு தொடர்பான நிபந்தனைகள் எதுவும் விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, பிற சந்தர்ப்பங்களில் அபராதம் வசூலிக்கப்படும்பட்சத்தில், அந்தந்த வங்கிகளின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்த கொள்கைக்கு உட்பட்டதாகவே அது இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை ஆய்வுகளின்போது, முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும் கடன்களுக்கு அபராதம் விதிப்பதில், வங்கிகள் வெவ்வேறு நடைமுறையை பின்பற்றுவது தெரியவந்தது.

இதுதொடர்பாக வாடிக்கையாளர்களிடமிருந்தும் புகார்கள் வரத் துவங்கியதை அடுத்து, ரிசர்வ் வங்கி இந்த வரைவு முன்வடிவை வெளியிட்டு உள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அடுத்த மாதம் 21ம் தேதி வரை இதுதொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும்; அதன் பிறகு இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement