48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?

சென்னை: நாடு முழுதும் உள்ள, 52 மின் வினியோக நிறுவனங்களின் செயல் திறனை உள்ளடக்கிய தரவரிசை பட்டியலை, மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக மின் பகிர்மான கழகம், 'சி மைனஸ் கிரேடு' பெற்று, 48வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான, மின் பகிர்மான கழகம் மட்டுமே மேற்கொள்கிறது. அதே சமயம், ஆந்திரா, குஜராத் உட்பட பல மாநிலங்களில், இந்த பணியை இரண்டு, மூன்று நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
12.92 சதவீதம்
கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் நாடு முழுதும் உள்ள மின் வினியோக நிறுவனங்களின் செயல் திறன் தொடர்பாக, அவற்றின் நிதி நிலைமை, மின் கட்டணம் வசூல், மின் வினியோக செயல்பாட்டை மதிப்பீடு செய்து தரவரிசை பட்டியலை, மத்திய மின்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், 52 அரசு மற்றும் தனியார் மின் வினியோக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி, 'ஏ பிளஸ், ஏ, பி, பி மைனஸ், சி, சி மைனஸ்' போன்ற கிரேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், தமிழக மின் பகிர்மான கழகம், 11.90 மதிப்பெண்ணுடன், 'சி மைனஸ் கிரேடு' பெற்று, 48வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம், அதற்கு முந்தைய ஆண்டான, 2022 - 23 பட்டியலில், சி மைனஸ் கிரேடு உடன், 50வது இடத்தில் இருந்தது.
தரவரிசை பட்டியலில், தமிழக மின் பகிர்மான கழகம் மோசமான நிலையில் இருப்பதற்கு, பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
* மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் மின் இழப்பு, 10.31 சதவீதத்தில் இருந்து, 12.92 சதவீதமாக அதிகரித்துள்ளது.
* மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, 'பில்லிங்' போடும் திறன், 90.83 சதவீதத்தில் இருந்து, 90.08 சதவீதமாக குறைந்துள்ளது
* மின் கட்டணம் வசூலிக்கும் நாள், 55ல் இருந்து, 58 நாட்களாக அதிகரித்து உள்ளது.
* மின் கொள்முதலுக்கு பணம் வழங்குவது, 170 நாட்களில் இருந்து, 184 நாட்களாக அதிகரித்துள்ளது.
* மின் கட்டணம் வசூலிக்கும் திறன், 98.75 சதவீதத்தில் இருந்து, 96.67 சதவீதமாக குறைந்து உள்ளது.
97.20 மதிப்பெண்
அதேசமயம், ஒரு யூனிட் மின்சாரம் விற்பனை வாயிலாக கிடைத்த வருவாய் மற்றும் மின்சார செலவுக்கு இடையிலான இடைவெளி, 89 காசில் இருந்து, 11 காசாக குறைந்துள்ளது.
மத்திய தரவரிசை பட்டியலில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் துறையைச் சேர்ந்த, 'அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை' நிறுவனம், 99.80 மதிப்பெண்ணுடன், 'ஏ பிளஸ்' கிரேடு பெற்று, முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, குஜராத் அரசின், 'தக் ஷின் குஜராத் விஜ்' நிறுவனம், 97.50 மதிப்பெண்ணுடன், ஏ பிளஸ் கிரேடு உடன் இரண்டாவது இடத்திலும், உ.பி., 'நொய்டா பவர் கம்பெனி' நிறுவனம், 97.20 மதிப்பெண்ணுடன், ஏ பிளஸ் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு அடுத்து, 49வது இடத்தில் தெலுங்கானா மாநில அரசின் மின் வினியோக நிறுவனமும், 50வது இடத்தில், உ.பி., அரசின் தக் ஷினான்சல் வித்யுத் விட்ரன் நிகாமும், 51வது இடத்தில், ஜார்க்கண்ட் மாநில அரசின் பிஜிலி விட்ரன் நிகாமும், 52வது இடத்தில் மஹாராஷ்டிரா மாநில அரசின் மின் வினியோக நிறுவனமும் உள்ளன.

மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி ‛பவுலிங்'
-
ரயில் நிலையங்களில் அத்துமீறல்; தி.மு.க.,வினர் மீது வழக்கு
-
அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை என்ன? நாளை கேட்கிறது அமைச்சர்கள் குழு
-
மணமக்கள் பெயரைப் பார்த்தால் சங்கடம்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
-
போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .