கர்நாடக கவர்னர் - அரசு இடையே நாளுக்கு நாள் முற்றுகிறது மோதல்

பெங்களூரு: மசோதாக்களை திருப்பி அனுப்புவதால், கர்நாடக கவர்னர் - அரசு இடையிலான மோதல் நாளுக்கு நாள் முற்றுகிறது.

பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் அரசுகளுக்கு தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுவது சகஜமாக உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் கவர்னர் - அரசுகளுக்கு இடையிலான மோதல் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் - கவர்னர் ரவி; கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் - முன்னாள் கவர்னர் ஆரீப் முகமது கான் இடையில் மோதல் வெடித்தது.

ஏஜென்ட்



கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா - கவர்னர் தாவர்சந்த் கெலாட் இடையில் எந்த பிரச்னையும் சுமூகமாக சென்று கொண்டு இருந்தது.

கடந்த ஆண்டு முடா வழக்கில், சித்தராமையா மீது கவர்னர் விசாரணைக்கு உத்தரவிட்டதில் இருந்து, அவர்கள் இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது.

அதுவரை கவர்னரை பற்றி எதுவும் பேசாத சித்தராமையா, தன் மீது விசாரணைக்கு உத்தரவிட்ட பின், கவர்னர் பா.ஜ.,வின் கைகூலி, ஏஜெண்ட் என்று வார்த்தையை விட்டார். துணை முதல்வர் சிவகுமாரும், தன் பங்குக்கு கவர்னரை வசைபாடினார். அதுவரை பொறுமையாக இருந்த கவர்னர் கெலாட், இனி நான் யார் என்று காட்டுகிறேன் என்பது போல தனது வேலையை காட்ட ஆரம்பித்தார்.

வினாத்தாளை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அரசால் கொண்டு வரப்பட்ட கர்நாடக பொது தேர்வு மசோதா 2023; கர்நாடக நகராட்சிகள் மற்றும் சில பிற சடட மசோதா 2024; நகராட்சி திட்டமிடல் மசோதா 2024.

கர்நாடக மத நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் திருத்த சட்டம் 2024; கர்நாடகா கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டம் 2024; கதக் பெடகேரி வணிக பிரதர்ஷனா பதிகார மசோதா 2024.

மைசூரு வளர்ச்சி ஆணைய சட்ட மசோதா 2024 உட்பட சில மசோதாக்கள், கவர்னரின் ஒப்புதலுக்கு அரசிடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

மக்கள் பாதிப்பு



ஆனால் அந்த மசோதாக்களில் குறைகள் இருப்பதாக கூறி, கவர்னர் திருப்பி அனுப்பினார். இது அரசுக்கும், கவர்னருக்கும் இடையில் மோதலை துாண்டியது.

சமீபத்தில் நிதி நிறுவனங்கள் மக்களுக்கு தொல்லை கொடுப்பதை தடுக்கும் வகையிலான, சட்ட மசோதாவும் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் திருப்பி அனுப்பினார். குறைகள் நிவர்த்தி செய்து அனுப்பிய பின், ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிக்கும் சட்ட மசோதா; கிராம பஞ்சாயத்து ராஜ் துறை தொடர்பான ஒரு மசோதாவை அரசு, கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

அந்த இரண்டு மசோதாக்களை நேற்று முன்தினம் திருப்பி அனுப்பி வைத்தார்.

கவர்னரின் இந்த நடவடிக்கை, கர்நாடக காங்கிரஸ் அரசில் அங்கம் வகிப்போர், கண்களை சிவக்க வைத்து உள்ளது. கவர்னர் - அரசு ஒற்றுமையான பாலத்தில் சென்றால் தான், மாநில மக்களுக்கு நல்லது நடக்கும்.

ஆனால் இருவருக்கும் இடையிலான மோதலால் அதிகம் பாதிக்க போவது மக்கள் தான். இதனை ஆட்சியில் இருப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கவர்னருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இருந்தால் நல்லது என நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement