தெலுங்கானா சுரங்க விபத்து; தொழிலாளர்கள் 8 பேரும் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீ சைலம் அணை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் நாகர்கர்னுால் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து, 4 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் கீழ், 44 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் அமைக்கப்படுகிறது. பிப்., 22ல் திடீரென சுரங்க மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டதால், 40க்கும் மேற்பட்டோர் தப்பிய நிலையில், இரண்டு இன்ஜினியர்கள் உட்பட எட்டு பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், எலி வளை சுரங்க நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் அடங்கிய குழுவினர், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீர்க்கசிவு, இடிபாடுகள், மண் போன்றவற்றால் மீட்புப் பணியில் சவால் ஏற்பட்டது. 30 அடி உயரம் கொண்ட சுரங்கத்தில் 25 அடி வரை சகதி நிரம்பி கிடந்தது. இதையடுத்து, மீட்புப் படையினர் தண்ணீரை அகற்றி சுரங்கத்துக்குள் முன்னேறினர்.
நீடித்த கடும் முயற்சிக்கு பின், சுரங்கம் இடிந்து விழுந்த இடத்தை, 20 பேர் அடங்கிய மீட்புக் குழுவினர் சென்றடைந்தனர். ஆனால், சகதி இறுகி கிடப்பதால், எட்டு பேரும் எங்கு சிக்கியுள்ளனர் என்பதை மிகச் சரியாக கண்டுபிடிக்க மோப்ப நாய் அழைத்து வரப்பட்டது. இறுகி கிடக்கும் சகதியை உடைக்கும் பணியும் நடந்தது.
இந்நிலையில், இன்று சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். தற்போது 5 பேரின் உடல் மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஒருவாரமாக மீட்புப் பணி நடைபெற்று வந்தும் பயன் அளிக்காமல் போனது.


மேலும்
-
கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகை தமன்னா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
-
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி; மத்திய அரசு உதவி செய்யும் என பிரதமர் மோடி உறுதி
-
உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
-
மாநிலத்தில் சுயாட்சி, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பே பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி; ஸ்டாலின் பேட்டி
-
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.63,520!
-
திருநெல்வேலியில் கொட்டியது கனமழை; மழை அளவு விபரம் இதோ!