உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

15

கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்தனர்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தலைவர் ரேச்சல் ரிஸோ கூறியதாவது:
இந்த சந்திப்பு ஐரோப்பிய தலைவர்களை அமெரிக்கா உடன் எப்படி நட்பு நாடாகத் தொடர முடியும் என்று கேள்வி எழுப்ப வழிவகுக்கும். இது உலக அரங்கில் அமெரிக்காவை பலவீனப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு தலைவர் காஜா கல்லாஸ் கூறியதாவது: சுதந்திர உலகத்திற்கு ஒரு புதிய தலைவர் தேவை என்பது இன்று தெளிவாகிவிட்டது. இந்த சவாலை ஏற்றுக்கொள்வது ஐரோப்பியர்களான நம் கையில் தான் உள்ளது. உக்ரைனுக்கு எங்கள் ஆதரவை நாங்கள் அதிகரிப்போம். இதனால் அவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளரை எதிர்த்துப் போராட வழி வகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஜெர்மனியின் பதவி விலகும் அதிபர் ஓலாப் கூறியதாவது: உக்ரைன் மக்களை தவிர வேற யாரும் அமைதியை விரும்புவதில்லை. நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம். இந்த பயங்கரமான போரில் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவளிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறியதாவது: ஆக்கிரமிப்பாளர்களாக ரஷ்யா இருந்து வருகிறது. ரஷ்யாவால் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே போராடி வருபவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் தங்கள் கண்ணியத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், தங்கள் குழந்தைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமின்றி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் ஸ்பானிஷ் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement