நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா: 25 ஆண்டுக்கு பின் மோதல்

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் 25 ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன.

துபாயில் வரும் மார்ச் 9ல் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
* ஒருநாள் அரங்கில் இரு அணிகளும் 119 முறை மோதின. இந்தியா 61, நியூசிலாந்து 50ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. 7 போட்டிக்கு முடிவு இல்லை.
* சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இரு முறை மோதின. 2000ல் நியூசிலாந்து, 2025, லீக் சுற்றில் இந்தியா வென்றது.
* ஐ.சி.சி., 'நாக்-அவுட்' போட்டிகளில் (4) நியூசிலாந்து 3ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியா ஒன்றில் மட்டும் வென்றது.
* நைரோபியில் 2000, அக். 15ல் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய அணி 50 ஓவரில் 264/6 ரன் எடுத்தது. அப்போதைய கேப்டன் கங்குலி (117), சச்சின் (69) அசத்தினர். இதை விரட்டிய கேப்டன் பிளமிங்கின் நியூசிலாந்து, 49.4 ஓவரில் 265/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வென்றது. நியூசிலாந்து தரப்பில் சதம் விளாசிய கிறிஸ் கெய்ர்ன்ஸ் (102) கோப்பை வெல்ல கைகொடுத்தார். இதற்கு பின் உலக அளவிலான 'ஒயிட் பால்' கிரிக்கெட்டில் நியூசிலாந்து கோப்பை வெல்லவில்லை.
* 2019ல் நடந்த மான்செஸ்டரில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி (50 ஓவரில் 239/8), இந்தியாவை (49.3 ஓவரில் 221/10) 18 ரன்னில் வீழ்த்தியது.
* 2023ல் மும்பையில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி (50 ஓவர், 397/4), நியூசிலாந்தை (48.5 ஓவர், 327) 70 ரன் வித்தியாசத்தில் சாய்த்தது. இந்தியாவின் கோலி (117), ஸ்ரேயாஸ் (105) சதம் விளாசினர். 7 விக்கெட் சாய்த்த ஷமி, வெற்றிக்கு கைகொடுத்தார். மூவரும் தற்போதைய அணியில் இருப்பது பலம். நியூசிலாந்தின் டேரில் மிட்சல் சதம் வீணானது.
* 2021ல் ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணி, இந்தியாவை 8 விக்கெட்டில் வீழ்த்தி கோப்பை வென்றது.
இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் வருண் சக்வரர்த்தி 5 விக்கெட் வீழ்த்த, இந்திய அணி, நியூசிலாந்தை வென்றது. மீண்டும் அசத்தினால், 2000ல் பைனலில் சந்தித்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கலாம்.

இடம் சாதகமா
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது.
இது பற்றி நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் கூறுகையில்,'துபாயில் மட்டும் விளையாடுவதால், இங்கு எப்படி செயல்பட வேண்டுமென இந்தியாவுக்கு தெளிவாக தெரியும். தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. பைனலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்,''என்றார்.


ரச்சின் ரவிந்திரா கூறுகையில்,''லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டும் துபாயில் விளையாடினோம். மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடந்தன. துபாய் ஆடுகளம் பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. பைனலுக்கு இன்னும் இரண்டு நாள் உள்ளன. ஆடுகளம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்,''என்றார்.

Advertisement