தமிழகத்தில் 4000 நிரந்தர பேராசிரியர்கள் ஜூனில் நியமனம்: கோவி செழியன்

ஈரோடு:''தமிழகத்தில், 4000 நிரந்தர பேராசிரியர்கள் வரும் ஜூனில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

ஈரோட்டில் உள்ள சி.என்.கல்லுாரியில் ஆய்வு செய்த அவர் கூறியதாவது:

ஈரோடு, சி.என்.கல்லுாரியில், முதல்வர் அறிவித்தபடி விளையாட்டு அரங்கம், நவீன நுாலகம், ஐ.ஏ.எஸ்., அகாடமி விரைவில் ஏற்படுத்த வரைவுப்படத்தை பெற்றுள்ளோம்.

பெரியார் பல்கலை துணை வேந்தரின் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து, போலீஸ் துறையிலும், நீதிமன்றத்திலும் விசாரணை உள்ளது. இதை உயர் கல்வித்துறையும் கூர்ந்து கவனிக்கிறது. பாரதியார் பல்கலை முதுகலை ஆராய்ச்சி மையம் ஈரோட்டில் செயல்படுகிறது. இதை மூடவுள்ளதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். முதல்வரிடம் பேசி, மாணவர் நலன் காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சில ஆண்டுகளாக நடத்தப்படாத 'செட்' தேர்வு மார்ச் 6, 7, 8ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இனி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 'செட்' தேர்வு நடத்தப்படும். 'செட்' தேர்வு முடிந்த பின், மார்ச் மாத இறுதியில் கவுரவ விரிவுரையாளர், 1000 பேரை நியமிக்க உள்ளோம். ஜூன் மாதத்தில், 4000 நிரந்தர பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement