தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்: சுகாதாரத்துறை தீவிரம்

சென்னை: தமிழகத்தில், 100 சதவீத தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தாத மாவட்டங்களில், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த, பொது சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ், காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்ஸா, நிமோனியா, வயிற்று போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா உள்ளிட்ட, 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

ஆண்டுதோறும், 9.40 லட்சம் குழந்தைகளுக்கு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட, 11,000 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில், 90 சதவீதத்திற்கு மேலாக, தடுப்பூசி முறையாக போடப்பட்டாலும், ஒரு தவணைக்கு பின், மற்றொரு தவணையை முறையாக செலுத்தாத நிலை நீடித்து வருகிறது.

இதற்கு, புலம்பெயர்வு, தடுப்பூசி தவணை தேதியை மறந்து போதல், அரசு மருத்துவமனை அருகில் இல்லாதது, போன்ற பல்வேறு காரணங்களால், 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது.

இதைத் தவிர்க்க, தனியார் மருத்துவமனைகளில், இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுபடுத்த பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து குழந்தைகளுக்கும், 100 சதவீதம் தவணை தவறாமல் தடுப்பூசி வழங்குவதை, மாவட்ட சுகாதார அதிகாரிகள் கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, எந்தெந்த சுகாதார மாவட்டம், தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து, அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அம்மாவட்டங்களில், அரசு மருத்துவமனைகளை போல, தனியார் மருத்துவமனைகளிலும், இலவச தடுப்பூசி போடும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் வாயிலாக, அனைத்து குழந்தைகளுக்கும், ஒருங்கிணைந்த தடுப்பூசிகள் வழங்கப்படுவதை கண்காணிக்க, மாவட்ட வாரியாக, சிறப்பு குழு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement