மூன்றாவது முறை இந்தியா சாம்பியன்

துபாய்: ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா. இதுவரை 3 முறை (2002, 2013, 2025) சாம்பியன் ஆனது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (2006, 2009) உள்ளது. தென் ஆப்ரிக்கா (1998), நியூசிலாந்து (2000), இலங்கை (2002), வெஸ்ட் இண்டீஸ் (2004), பாகிஸ்தான் (2017) தலா ஒரு முறை கோப்பை வென்றன. இதில் 2002ல் இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

12 ஆண்டுக்குப் பின்...
கடந்த 2013ல் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றது. அதன்பின் 2017ல் நடந்த பைனலில் தோற்றது. தொடர்ந்து 3வது முறையாக (2013, 2017, 2025) பைனலுக்கு முன்னேறிய இந்தியா, நேற்று, நியூசிலாந்தை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

ஏழாவது அதிசயம்
ஐ.சி.சி., அரங்கில், இந்திய அணி 7வது முறை கோப்பை வென்றது. நேற்று 3வது முறையாக (2002, 2013, 2025) சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்தியா, தலா 2 உலக கோப்பை (1983, 2011), 'டி-20' உலக கோப்பை (2007, 2024) கைப்பற்றியது.

நான்கு முறை
ஐ.சி.சி., அரங்கில் கோப்பை வென்ற இந்திய அணியில் ரோகித் சர்மா, விராத் கோலி தலா 4 முறை இடம் பிடித்திருந்தனர்.
* ரோகித் இடம் பிடித்திருந்த இந்திய அணி 2 'டி-20' உலக கோப்பை (2007, 2024), 2 சாம்பியன்ஸ் டிராபியில் (2013, 2025) சாம்பியன் ஆனது.
* கோலி இடம் பிடித்திருந்த இந்திய அணி, 2 சாம்பியன்ஸ் டிராபி (2013, 2025), ஒரு உலக கோப்பை (2011), ஒரு 'டி-20' உலக கோப்பை (2024) கைப்பற்றியது.

இரண்டாவது பட்டம்
ஐ.சி.சி., தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 2வது கோப்பை வென்றது. கடைசியாக, கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 'டி-20' உலக கோப்பை வென்றிருந்தது.

தொடரும் மைதான ராசி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டியில், இந்திய அணி தோல்வியை சந்தித்ததில்லை என்ற வரலாறு தொடர்கிறது. இதுவரை இங்கு விளையாடிய 11 போட்டியில், 10ல் வென்றது. ஒரு போட்டி 'டை' ஆனது.
* இம்முறை நுாறு சதவீத வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது.

ஞாயிறு சோகம் தீர்ந்தது
ஞாயிறு அன்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி (2000, 2017), உலக கோப்பை (2003, 2023), 'டி--20' உலக கோப்பை (2014) பைனலில் இந்தியா தோற்றது. மற்ற தினத்தில் நடந்த உலக கோப்பை (1983, 2011, சனி), 'டி--20' உலக கோப்பை (2007-திங்கள், 2024-சனி), சாம்பியன்ஸ் டிராபி (2002, 2013, திங்கள்) பைனலில் அசத்திய இந்தியா கோப்பை வென்றது.
நேற்று நியூசிலாந்தை வென்றதன்மூலம், இந்தியாவின் ஞாயிறு பைனல் சோகம் முடிவுக்கு வந்தது.

Advertisement