தமிழ் தெம்பு திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷாவில், தமிழ் தெம்பு திருவிழாவின் ஒரு பகுதியாக நடந்த ரேக்ளா பந்தயத்தில், காளைகள் சீறிப்பாய்ந்தன.

ஈஷா யோகா மையம் சார்பில், தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில், தமிழ் தெம்பு தமிழ் மண் திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி, ஆதியோகி முன்பு துவங்கி நடந்து வருகிறது.

இத்திருவிழாவின் ஒரு பகுதியாக, ரேக்ளா பந்தயம், நாதேகவுண்டன்புதூரில் நேற்று நடந்தது. இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் காளைகளுடன் பங்கேற்றனர்.

200 மீட்டர், 300 மீட்டர் என, இரண்டு பிரிவுகளாக போட்டி நடந்தது. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. தமிழ் தெம்பு திருவிழாவுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, விழா இன்று ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement