தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்

மும்பை: கொரோனா தொற்றுக்குப் பின், கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி 244 டன் அளவுக்கு தங்கத்தின் கையிருப்பை அதிகரித்து உள்ளது.

உலகில் அதிகளவில்தங்கத்தை வாங்கிய நாடுகளில் முதலிடத்தை சீனாவும்; இரண்டாம் இடத்தை இந்தியாவும் பெற்றிருப்பது, உலக தங்க கவுன்சில் தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை துவங்கியதை தொடர்ந்து, பல நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களது பொருளாதார நடவடிக்கைகளை அதற்கேற்ப மாற்றின.

ஆனால், எந்தவொரு மத்திய வங்கியை விட, சீனாவும், இந்தியாவும் தங்கத்தின் கையிருப்பை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு முதல் -2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி 244 டன் தங்கத்தின் கையிருப்பை அதிகரித்துள்ளது.

இதே காலத்தில், சீனா 336 டன் அளவுக்கு கையிருப்பை அதிகரித்து உள்ளது.

குறிப்பாக, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 700 டன் அளவுக்கு தங்க கையிருப்பை அதிகரித்து உள்ளன. இதில், மூன்றில் ஒரு பங்கு இந்தியா வசமுள்ளது.

உலகளாவிய கரன்சி மதிப்பு, உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் வட்டி விகிதங்கள், தங்கம் விலை, கடன் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அபாயங்களை சமாளிக்கவும், புவிசார் அரசியல், பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் தங்கத்தின் கையிருப்பை ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை குறைத்த போதிலும், இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகிறது.

கடந்த 2024ம் ஆண்டின் கடைசி காலாண்டில் 22.54 டன் தங்கத்தை இந்தியா வாங்கி இருந்தது. இதே காலத்தில், சீனா 15.24 டன் தங்கத்தை வாங்கி இருந்தது.

அதிகபட்சமாக, போலந்து 28.53 டன் தங்கத்தை வாங்கியிருந்தது. 2025ல் கிட்டத்தட்ட 3 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜன., 31ம் தேதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் வசமுள்ள தங்கத்தின் கையிருப்பு 879 டன்களாக அதிகரித்து உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில்

அதிகளவில் தங்கம் வாங்கிய நாடுகள்

நாடுகள் தங்கம் (டன்களில்)

சீனா 336

இந்தியா 244

போலந்து 223

சிங்கப்பூர் 93

ஜப்பான் 81

தாய்லாந்து 81

ஹங்கேரி 79

ஆதாரம்: உலக தங்க கவுன்சில்

Advertisement