காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள், நேரடியாக காஷ்மீர் செல்லும் வகையில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தெற்கு ரயில்வே மெகா திட்டம் தீட்டி வருகிறது.
காஷ்மீர் சுற்றுலா செல்வதற்கும், ஆன்மிக யாத்திரை செல்வதற்கும் தமிழகத்தை சேர்ந்த பலரும் விரும்புகின்றனர். ஆனால் அதற்கு நேரடியான ரயில் சேவை இல்லை. காஷ்மீர் செல்வோர், சாலை அல்லது விமானம் மூலமாக மட்டுமே செல்ல வேண்டியுள்ளது.
எனவே பயணிகள் நலன் கருதி, தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடியாக செல்லும் வகையில் அம்ரித் பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சிறப்புகள் என்ன?
* இந்த புதிய ரயில் கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரை இணைக்க உள்ளது.
* இந்த புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் இரண்டு முனைகளிலும் தொழில்நுட்ப வசதியுடன் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* ரயிலை மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
* உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் பாதை திட்டத்தின் கடைசி கட்டமான 111 கிலோமீட்டர் நீள பாதை, அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் புதிய போக்குவரத்து வசதிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தான் அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீநகர் பாரமுல்லாவிற்கு ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது, மேலும் இந்த பாதை விரைவில் இயக்கத்திற்கு திறக்கப்படும். இந்த சூழலில், தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் செல்ல பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது, கன்னியாகுமரியிலிருந்து- ஜம்மு காஷ்மீரின் கத்ரா வரை இயக்கப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், 3,785 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் பயணம் செய்ய முடிகிறது. அம்ரித் பாரத் ரயிலும் இயக்கப்பட்டால் நேரடியாக ஸ்ரீநகர் சென்று சேர பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
22 பெட்டிகள்
2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், 12 ஸ்லீப்பர் பெட்டிகள், எட்டு பொது பெட்டிகள் மற்றும் இரண்டு லக்கேஜ் பெட்டிகள் உட்பட 22 பெட்டிகளைக் கொண்டுள்ளது.
கூடுதலாக, விபத்துகள் போன்ற அவசர நிலைகளின் போது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்பத்துடன் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












மேலும்
-
வாக்காளர் பட்டியலில் முறைகேடு; பார்லியில் விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்
-
ஐ.பி.எல்., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு; சுகாதாரத்துறை உத்தரவு
-
ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
-
கழிவறையில் கிடந்த மிரட்டல் கடிதம்; வந்த வழியிலே மீண்டும் திரும்பியது விமானம்!
-
மன்னர் என நினைத்து செயல்படும் தர்மேந்திர பிரதான்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!
-
பஞ்சாபில் சர்வதேச போதை கடத்தல் மன்னன் கைது!