தங்கம் கடத்திய ரன்யா ராவ் குறித்து சட்டசபையில்... காரசாரம்!: 12 ஏக்கர் ஒதுக்கியது பா.ஜ., தான் என காங்., காட்டம்

துபாயில் இருந்து விமானத்தில் பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவை, கடந்த 3ம் தேதி விமான நிலையத்தில், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
தங்கம் கடத்தலில் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.
கார்கலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் பேசுகையில், ''நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்த செய்தி, நாடு முழுதும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் 15 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்ததாக, ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
பெங்களூரில் நிறைய மாபியாக்கள் இருப்பது தெரியும். ஆனால், நகை கடத்தல் மாபியா பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
''தங்கம் கடத்தலில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. விமான நிலையத்திற்கு போலீஸ் ஜீப்பை அனுப்பி, ரன்யா ராவை அழைத்து வரும்படி கூறியது யார். இந்த வழக்கில் எந்த அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என்பதை, மக்கள் முன்பு அரசு வெளிப்படுத்த வேண்டும்,'' என்றார்.
என்ன செய்வது?
இதற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பதில் அளிக்கையில், ''ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்தது பற்றி மத்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., - வருவாய் புலனாய்வு பிரிவு விசாரிக்கிறது.
இதுபற்றி ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். வழக்கு விசாரணை தொடர்பாக எங்களை, அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. இந்த வழக்கில் அமைச்சருக்கு தொடர்பு இருந்தால், அதை சி.பி.ஐ., கண்டுபிடிக்கட்டும்,'' என்றார்.
பரமேஸ்வரின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த சுனில்குமார், ''சம்பந்தப்பட்ட அமைச்சரை பாதுகாக்க, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் முயற்சி செய்கிறார். என்ன கேட்டாலும், எனக்கு தெரியாது என்று தான் பதில் சொல்கிறார். இந்த வழக்கை, அரசே சி.பி.ஐ.,யிடம் கொடுத்து இருக்கலாம்,'' என்றார்.
இதனால் கோபம் அடைந்த பரமேஸ்வர், ''விசாரணை குறித்த தகவலை, எங்களிடம் வருவாய் புலனாய்வு பிரிவு பகிர்ந்து கொள்ளவில்லை. நாங்கள் என்ன செய்வது,'' என்று காட்டமாக கேட்டார். பதிலுக்கு சுனில்குமாரும் ஏதோ கூற, இருவருக்கும் இடையில் காரசார விவாதம் நடந்தது.
2 அமைச்சர்கள்
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காதர், சுனில்குமாரை பார்த்து, ''உங்களுக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால், உள்துறை அமைச்சரை அவரது அலுவலகத்திற்கு சென்று பாருங்கள்,'' என்று கூறினார்.
குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் அசோக், ''தங்கம் கடத்தியது குறித்து சி.பி.ஐ., மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரிக்கலாம். ஆனால் ரன்யா ராவை அழைத்து வர, போலீஸ் ஜீப் அனுப்பியவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட பரமேஸ்வர், விசாரிப்பதாக கூறினார். சட்டசபையில் மட்டுமின்றி வெளியிலும், இந்த பிரச்னை எதிரொலித்தது.
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டியில், ''ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில், இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது. அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி நடக்கிறது,'' என்றார். விஜயேந்திரா கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், பா.ஜ., தலைவர்களும், தங்கம் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று கூறினர்.
அதிகாரிகள் குழு
விவசாய அமைச்சர் செலுவராயசாமி கூறுகையில், ''தங்கம் கடத்தலில் அமைச்சர்கள் பங்கு இருந்ததால், அது சி.பி.ஐ., விசாரணையில் தெரியவரும்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதிலும், பொய் பரப்புவதிலும் பா.ஜ., தலைவர்களுக்கு அனுபவம் அதிகம். நாங்கள் ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில், எதிர்க்கட்சி தரப்பில் இருந்து, ஒரு நல்ல ஆலோசனை கூட வந்தது இல்லை,'' என்றார்.
பா.ஜ., ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக, அனைத்து அமைச்சர்களும் ஒரே பாணியில் கூறினர். மேலும் பா.ஜ., ஆட்சியில் தான், ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு 12 ஏக்கர், அரசு நிலம் ஒதுக்கப்பட்டது என்றும் பதிலடி கொடுத்தனர்.
இதுகுறித்து பா.ஜ., முன்னாள் தொழில் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி கூறுகையில், ''தங்கம் கடத்திய வழக்கில் கைதாகி உள்ள ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு, அரசு நிலம் 12 ஏக்கர் ஒதுக்கப்பட்டதில் எனது பங்கு எதுவும் இல்லை.
நிலம் ஒதுக்குவது குறித்து முடிவு செய்தது 20 பேர் கொண்ட அதிகாரிகள் குழு தான்,'' என்றார்.
மேலும்
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு